தமிழ்நாடு

'கொள்கை முடிவில் தலையிட முடியாது' : ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் மனு

'கொள்கை முடிவில் தலையிட முடியாது' : ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் மனு

webteam

தூத்துக்குடியில் அபாயகரமான அளவில் நச்சுவாயு வெளியேற்றக்கூடி‌ய ஒரே ஆலை ஸ்டெர்லைட் மட்டுமே என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1994ஆம் ஆண்டு கொள்கை அடிப்படையில் சில‌ நிபந்தனைகளுடன் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, 2018 மே மாதம் அரசின் கொள்கை முடிவெடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மொத்தமுள்ள தொழிற்சாலைகளில், ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே அதிக விஷவாயுவை வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ள தமிழக அரசு, அரசின்‌ கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்டுள்ளது. எனவே வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் பதில் மனுவுக்கு வேதாந்தா நிறுவனமும், பிற மனுதாரர்களும் விளக்க‌மளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிக‌ள், வழக்கை இறுதி வாதங்களுக்காக ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.