தமிழ்நாடு

யானைகளை பராமரிக்கும் பொள்ளாச்சி மலசர் இன மலைவாழ் மக்களுக்கு "கஜ் கவ்ரவ்" விருது அறிவிப்பு

webteam

பொள்ளாச்சி அருகே யானைகளை பராமரிக்கும் மலசர் இன மலைவாழ் மக்களுக்கு "கஜ் கவ்ரவ்" விருது வழங்கவுள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி உள்ளிட்ட வனசரகத்தில் கோழி கமுத்தி, நாகரூத்து, சர்கார்பதி, கூமாட்டி, வெள்ளிமுடி, கல்லார்குடி உள்ளிட்ட 32 மலைவாழ் மக்கள் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு முதுவர், மலசர், மலமலசர், இரவாளர், காடர், புளையர் இன மலைவாழ் மக்கள் சுமார் 7000 பேர் இந்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக வளர்ப்பு யானைகளை கொண்டு இயங்கி வருகிறது ஆனைமலை புலிகள் காப்பகம்.

டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் மொத்தம் 26 வளர்ப்பு யானைகள் உள்ளது. இங்கு வளர்க்கப்படும் யானைகளுக்கு மலசர் இன மலைவாழ் மக்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இங்கு யானைகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய மாஹுத் மற்றும் காவடி எனும் பொறுப்பில் 52 பேர் உள்ளனர். இங்கு இவர்களால் பயிற்சி அளிக்கப்படும் யானைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யானை மனித மோதலில் பெரும்பாலும் கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி செய்யவும் இந்த வளர்ப்பு யானைகள் பயன்படுத்த படுகின்றன.

இந்தியாவிலேயே யானைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள மாஹுத் மற்றும் காவடி ஆகியோரை கவுரவிக்கும் விதமாக யானைகளை பராமரிக்கக்கூடிய மலாசர் இன மக்களுக்கு "கஜ் கவ்ரவ்" விருதை அறிவித்துள்ளது மத்திய வனத்துறை அமைச்சகம். இந்த விருது மலசர் இன மக்களில் சிறந்த முறையில் யானையை பராமரித்து வரும் ஐந்து பேரை தேர்வுசெய்து அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார் தேசிய பூங்காவில் வைத்து "கஜ் கவ்ரவ்" விருது வழங்க உள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.