தமிழ்நாடு

’இதை சாப்பிடுங்க உடலுக்கு நல்லது’-சமூகவலைதள தகவலை பார்த்துசாப்பிட்ட இளைஞருக்கு நடந்த சோகம்

webteam

ஆம்பூர் அருகே செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைதளங்களில் வந்த தகவலின் பேரில், செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் (25) என்ற இளைஞரும், நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் (45) என்பவரும் ஒன்றாக மின்னூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் பணியாற்றி வரும் நிலையில், இருவரும் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அதன்பேரில் செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவலின் பேரில், இருவரும் ஒன்றாக செங்காந்தள் பூ செடியின் கிழங்கை நேற்று சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்டதும் இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இருவரையும் சிகிச்சைக்காக அவர்களது உறவினர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் லோகநாதன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரத்தினத்திற்கு வேலூர் தனியார் மருத்துவமனையில் (CMC) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்நிகழ்வு குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் பரிந்துரையின்றி எந்தவிதமான புதிய உணவுகளையும் உண்பது, ஆபத்தில் போய் முடியும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.