நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதியமைச்சருக்கு தெரியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரளாவின் முக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10-15 ஆண்டுளாக கட்டமைத்த மிகப்பெரிய பொருளாதார வலிமை அழிக்கப்பட்டு வருகின்றது. வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டால், திமிருடன் தான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்.
நிதியமைச்சரின் வேலை தான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை இந்தியாவுக்கு சொல்வதல்ல. உண்மை என்னவென்றால், நடக்கும் பிரச்னை குறித்து அவருக்கு எந்த புரிதலும் இல்லை. அடிப்படையில், அவர் திறமையற்றவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பொருளாதார துறையை திறமை வாய்ந்தவர்கள் கையாண்டனர்” என்றார்.
முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ சாப்பிடுவதில்லை. ஆகவே கவலை வேண்டாம். வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத ஒரு குடும்ப பழக்கத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.