மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தங்களின் 90 சதவீத விசாரணையை முடிந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, அதுசம்பந்தமாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருவதாகவும், இதுநாள்வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 11 வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எதிர்த்தரப்பான விசாரணை ஆணையத்தின் தரப்பில், "100 க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 90 சதவீத விசாரணை ஏற்கெனவே முடிந்து விட்டது. இடையே அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ஆணைய விசாரணைக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 25 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.