தமிழகம், புதுச்சேரியில் தனித்தேர்வர்கள் உட்பட +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகம் - புதுச்சேரியில் உள்ள 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,35,525 மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு அறைகளில் மாணவர்களை கண்காணிக்க 42,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 24-ஆம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதான தண்டனை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், விடைக் குறிப்புகளை வைத்திருத்தலில் ஈடுபட்டால் தேர்வெழுத அனுமதி மறுக்கப்படும். காப்பி அடித்தலில் ஈடுபடும் மாணவர்களுக்கு தேர்வெழுத இரண்டாண்டுகளுக்கு தடை விதிக்கப்படும். வினாத்தாளை வெளியிடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும். வினாத்தாளில் விடைகளை எழுதி தூக்கி எறிபவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.