தமிழ்நாடு

”OPS எதிர்காலம் இனி ஜீரோ தான்..கௌரவர் சூழ்ச்சியில் பாண்டவர் வென்றுள்ளனர்!" - ஜெயக்குமார்

webteam

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்துக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.‌ அதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர், அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், ”கௌரவர்களின் சூழ்ச்சி எடுபடவில்லை. பாண்டவர்களான எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. மகிழ்ச்சியான தீர்ப்பு. அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது” என்று கூறினார்.

மேலும், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை. அவர்கள் தவிர மற்றவர்கள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தார். ஜூலை 11-ல் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் அதிமுக இபிஎஸ் வசமாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.