தமிழ்நாடு

நெல் ஜெயராமன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கட்டிமேடு கிராமம்

webteam

இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், அவர் சொந்த ஊரான கட்டிமேடு கிராமம் சோகத்தில் மூழ்கியது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் உடல் பாதித்த நிலையிலும் 39 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்தார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் இயற்கை விவசாயத்தை பற்றி பயிற்சி அளித்த இந்த இயற்கை விவசாயி மறைந்ததால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக பார்க்கப்பட்டவர். இதுவரை 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்த பெருமை இவரையே சாரும். 

உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு வருட காலமாக நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்செய்தி அறிந்த அவர் சொந்த ஊரான கட்டிமேடு கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரங்கம் என்ற இடத்தில் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நெல் ஜெயராமன் நடத்தி வந்தார். இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான இயற்கை விவசாயிகள் வேளாண் மாணவர்களுக்கும் இயற்கை விவசாய முறையை கையாள்வது குறித்து பயிற்சி கொடுத்து வந்தார். 

தற்போதுகூட 30 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாணவர்களும் விவசாயிகளும் பயிற்சி பெறுவதற்காக குள்ள கார், மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா, மிளகு சம்பா, திருப்பாச்சி, குதிரைவாலி, வாலான் காட்டுயானம் போன்ற பாரம்பரிய 39 நெல் ரகங்களை பயிரிட்டிருந்தார். 

இங்கு பயிற்சி பெற வருவோருக்கு இயற்கை முறையில் உரம் தயாரிப்பது எப்படி? இயற்கை முறையில் பயிர் செய்வது எப்படி? என்பன போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும், இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது நெல் ஜெயராமன் உயிரிழந்ததை அடுத்து மீண்டும் யார் அந்த இடத்தை பூர்த்தி செய்வது என்ற சோகத்தில் பயிற்சி மையத்தில் பணியாற்றுபவர்கள் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி பேரிழப்பு ஒட்டுமொத்த விவசாயிகளின் பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது.