இலங்கை அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி வென்றது. ஹம்மன்தொட்டா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குணரத்னே ஆட்டமிழக்காமல் 59 ரன்களும், குணதிலகா 53 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான மசகட்சா மற்றும் மயர் ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. மயர் 43 ரன்களும், மசகட்சா 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 2 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த ஜிம்பாப்வே அணி எளிதாக வென்றுவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அணியின் தனஞ்செயா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணியின் வெற்றியை தாமதமாக்கினார். முடிவில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் இலங்கை அணிக்கெதிரான தொடரையும் ஜிம்பாப்வே அணி வென்றது. பந்துவீச்சில் கலக்கிய சிக்கந்தர் ராசா 27 ரன்கள் குவித்து ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஜிம்பாப்வே அணியின் மசகட்சா அறிவிக்கப்பட்டார்.