விளையாட்டு

'கடைசி நேர ட்விஸ்ட், பரபரப்பு' - அசத்தலாக முடிந்த ஜிம்பாப்வே - வங்கதேசம் போட்டி

jagadeesh

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 ஆட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்.

ஆஸ்திரேலியாவில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. அதில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே - வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. அந்த அணியின் நஜ்முல் ஹூசைன் 55 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். இதர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களையே சேர்த்தனர். ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 35 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஷான் வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடி ஜிம்பாப்வே அணியை வெற்றியின் அருகே கொண்டு சென்றபோது 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

வெற்றிப்பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் ஜிம்பாப்வேக்கு தேவைப்பட்ட நிலையில் 19.3 ஆவது பந்தில் லெக் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைத்தது. பின்பு காரவா 19.4 ஆவது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால் அதற்கடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி பந்தில் ஜிம்பாப்வே 5 ரன்கள் எடுக்க வேண்டிய இருந்த நிலையில் முசாராபானி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் வங்கேசம் வெற்றிப்பெற்றதாக வீரர்கள் துள்ளி குதித்தனர். ஆனால் நடுவர்கள் ரீப்ளேயில், வங்கதேசத்தின் விக்கெட் கீப்பர் பந்து ஸ்டம்புக்கு பின்னே வருவதற்குள்ளாகவே, அதை பிடித்து பேட்ஸ்மேனை அவுட்டாக்கியது தெரிந்தது.

இதனையடுத்து அந்தப் பந்தை நோ பால் என அறிக்கப்பட்டு, ஜிம்பாப்வேக்கு கூடுதலாக ஒரு ரன் கொடுக்கப்பட்டது. மேலும் அந்தப் பந்து ஃப்ரீ ஹிட் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெவிலியனக்கு சென்ற இருநாட்டு வீரர்களும் மைதானத்துக்கு வந்தனர். இப்போது 1 பந்தில் 4 ரன்கள் தேவை என நிலையில் முசாராபானி அந்த ரன்னை எடுக்க தவறினார். இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றிப்பெற்றது.