விளையாட்டு

'விராட் கோலியிடம் ஏன் அதையே எதிர்பார்க்கிறீர்கள்?' - சாஹல் ஆதங்கம்

JustinDurai

விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இன்று வரை சதம் அடிக்கவில்லை. இதன் காரணமாக விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''டி20 போட்டிகளில் 50+ சராசரி வைத்துள்ள விராட் கோலி, இரண்டு டி20 உலகக் கோப்பைகளில் அணியின் நாயகனாக இருந்துள்ளார். அவர் அனைத்து வடிவங்களிலும் 70 சதங்கள் அடித்துள்ளார். இங்கே பிரச்னை என்னவென்றால் விராட் கோலி இறங்கினாலே அவர் சதம் அடிக்க வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். அவர் பல போட்டிகளில் எடுத்த மதிப்புமிக்க 60 ரன்கள், 70 ரன்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் கிரீஸில் இருந்தால் எந்த ஒரு பந்து வீச்சாளரும் பவுலிங் செய்ய இப்போதும் அஞ்சுகிறார்கள்.

கேப்டன்கள் மாறினாலும் எனது பங்களிப்பு எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவர்கள் எப்போதும் என்னை விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளராகப் பயன்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, கேப்டன்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள். நான் ஒரு பந்துவீச்சாளராக நல்ல சுதந்திரம் பெற்றுள்ளேன். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே அவர்களும் விரும்புகிறார்கள். சில நேரங்களில் ரோஹித் பையா என்னிடம், 'இதுதான் நிலைமை, நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது நீங்களே ஏதாவது செய்யுங்கள் என்பார்'' என்று சாஹல் கூறினார்.

இதையும் படிக்க: ஃபார்முக்கு திரும்பிய தீபக் சாஹர்: டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா?