ஓய்வில் இருந்து வெளியேறி பஞ்சாப் அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக யுவராஜ் சிங் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய அணியில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். 2007ஆம் டி20 உலகக் கோப்பை, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இரண்டையுமே இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் யுவராஜ் சிங் தான். அதன்பின்னர் புற்றுநோய் பாதிப்பால் தடம் புரண்ட யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை, முற்றிலும் முடங்கியது. ஐபிஎல் தொடரில் பெரிதும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், கடந்த ஆண்டு அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் தான் கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாகவும், தனது ஓய்வை திரும்பப்பெற அனுமதிக்குமாறும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு யுவராஜ் கடிதம் எழுதியிருக்கிறார். பஞ்சாப் அணியின் நிர்வாகத்துடன் இணைந்து, அண்மையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யுவராஜ், நடப்பு ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள சுப்மான் கில், அபிஷேக் ஷர்மா, பிராப்சிம்ரன் சிங் மற்றும் அன்மொல்பிரீத் சிங் ஆகியோரை தயார் படுத்தினார். அப்போது அவர்களுடன் சேர்ந்து பேட்டிங் செய்த யுவராஜ் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதைக்கண்ட பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் புனீட் பாலி, யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட் விளையாட வர வேண்டும் எனவும், பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடி புதிய வீரர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஓய்வில் இருந்து மீள்வதில் துளியும் விருப்பம் இல்லை என தெரிவித்த யுவராஜ், பின்னர் பஞ்சாப் அணியின் இளம் வீரர்களுக்காக புனீட் பாலியின் கோரிக்கை ஏற்றுள்ளார். அதன்காரணமாகவே அவர் ஓய்வில் இருந்து வெளிவருவதாக பிசிசிஐ தரப்புக்கு கடிதம் எழுதியிருக்கிறார் எனத் தெரிகிறது.