நேரில் மிகவும் நல்லமுறையில் நடந்துக்கொள்ளும் சில வீரர்கள் சமூக வலைத்தளங்களில் வேறு மாதிரியாக இருக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருப்பவர் யுவராஜ் சிங். தோனியைப் போன்று இவருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது அதிரடி பேட்டிங்கால் தான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யுவராஜ் சிங் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தினார். இந்த முறையும் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்ற யுவராஜ் சிங், அவ்வப்போது தனது மனம் திறந்து பேசக்கூடியவர். இப்போது ஊரடங்கு காலம் என்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங்குடன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். அப்போது இன்றைய சூழிலல் சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் பங்கு குறித்தும் பேச்சு வந்தது.
அப்போது பேசிய யுவராஜ் " இப்போதுள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அதிகளவில் மெனக்கெடுகிறார்களோ என தோன்றுகிறது. சமூகவலைத்தளங்களில் இளைஞர்கள் அவர்களாக இருப்பதில்லை. எனக்கு தெரிந்த நிறைய வீரர்கள் கூட நேரில் மிகவும் பண்பட்டவர்களாக இருக்கிறார்கள், ஆனால் சமூக வலைத்தளத்தில் வேறுமாதிரியாக இருக்கிறார்கள்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என இளைஞர்கள் நினைக்கிறார்கள். பொதுமக்கள் தங்களை கொண்டாட வேண்டும் என நினைக்கிறார்கள், மேலும் பிரச்னைகளுக்கான தீர்வையும் சமூக வலைத்தளத்திலேயே கிடைக்கும் என நினைக்கிறார்கள். முதலில் உங்களுக்கென்று ஒரு கொள்கையை வைத்துக்கொள்ளுங்கள். அதில் உறுதியாக இருங்கள், நேரத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ளாதீர்கள். அது நீங்கள் உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்" எனக் கூறியுள்ளார் யுவராஜ் சிங்.