விளையாட்டு

2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் - மறக்க முடியுமா?

2011 உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் - மறக்க முடியுமா?

rajakannan

யுவராஜ் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இது கொஞ்சம் தாமதம்தான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பது எப்பொழுதே உறுதியாகிவிட்டது. கவுதம் காம்பீருக்கும் இதே நிலைதான் இருந்தது. அவரும் கடந்த டிசம்பரில்தான் ஓய்வை அறிவித்தார். காம்பீரை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங்கும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ். அவரது பேட்டிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். குறிப்பாக அவர் அடிக்கும் மெகா சிக்ஸர்களுக்கு. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியதை ரசிகர்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள். மிடில் ஆர்டரில் யுவராஜ்-ன் பங்களிப்பு அளப்பரியது. தொடக்கத்தில் முகமது கைஃப் உடனும், கடைசி கட்டத்தில் தோனியுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிறைய போட்டிகளில் விளையாடினார். தோனியுடன் அவர் இணைந்து விளையாடிய 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி சிறப்பானது. 

மற்ற சர்வதேச போட்டிகளை காட்டிலும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் களைகட்டும். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்தான் கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தது. 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் 362 ரன்கள் குவித்ததுடன் 15 விக்கெட்களையும் சாய்த்தார். அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது. அந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 57 ரன்களுடன் 2 விக்கெட்கள் சாய்த்தார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் அதில் இருந்து மீண்டு வந்து, கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தது ரசிகர்களை நெகிழ வைத்தது. இது அவரது போராட குணத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாக பார்க்கப்பட்டது. யுவராஜ் ஓய்வு அறிவிப்பு குறித்து பல்வேறு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கேப்டன் விராட் கோலி தன்னுடய ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணிக்காக விளையாடியதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.