விளையாட்டு

கபில்தேவ் வேட அனுபவம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரன்வீர்..!

webteam

கபில் வேடத்தில் நடித்து வருவது குறித்து ரன்வீர் சிங் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘ஹரியானா சூறாவளி’ கபில்தேவுக்கு இன்று பிறந்தநாள். அதனை அழகான பிறந்தநாளாக மாற்றி இருக்கிறார் நடிகர் ரன்வீர் சிங். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “ஜாம்பவானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். எங்களுக்கு வழி காட்டியமைக்கு நன்றி. நீங்கள்தான் எங்களுக்கு பெருமை சேர்த்தீர்கள். இது இப்போது எங்களுக்கான முறை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி 1983-ஆம் ஆண்டில் கபில்தேவ் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‘83’ படத்தினை கபீர் கான் இயக்கி வருகிறார். இது கபில்தேவின் உண்மைக் கதையாகும். ரன்வீர் இந்தப் படத்தில் கபில் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். இருவரும் திருமணம் முடிந்த பிறகு இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.

‘83’ படத்திற்காக போடப்பட்டுள்ள செட்டில் கபில்தேவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரன்வீர் பகிர்ந்துள்ளார். மேலும் கபில்தேவ் அந்தக் காலத்தில் பயன்படுத்திய, டிரெஸ்சிங் ரூம் செட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அந்த அனுபவங்களை அவர் கூறும் வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ரன்வீர் சிங், தனது பிறந்தநாளில் '83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் அவர் இளைய கபில்தேவ் போன்று அப்படியே இருந்தார். அப்படம் கபில் ரசிகர்களை மேலும் சுறுசுறுப்பாக்கியது. “எனது சிறப்பு நாளில் ஹரியானா சூறாவளி ஆன கபில் தேவ் இங்கே தோற்றம் கொடுக்கிறார்” என்று அவர் அப்போது எழுதியிருந்தார்.

இப்போது ரன்வீர் சிங் தர்மசாலாவில் படத்திற்காக போடப்பட்டுள்ள செட்டுகளில் கபில் தேவுடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டார். பின் பேசிய அவர், “கபில், நான் பெற்றவை விலைமதிப்பற்றவை என்று நான் நினைக்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” எனக் குறிப்பிட்டார். கபீர்கான் இயக்கியுள்ள '83’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாக உள்ளது.