விளையாட்டு

விடா முயற்சி.. அயராத பயிற்சி.. வறுமையை வென்று சாதித்த இளஞ்சிங்கம் ஜெய்ஸ்வால்..!

webteam

U19 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸ்வாலை இன்று இந்தியாவே கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம் அவர் அடித்த சதம் மட்டுமல்ல... வறுமையை வென்று சாதித்த அவரின் விடாமுயற்சி. தன்னம்பிக்கை. சச்சின் டெண்டுல்கர்போல் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தை மனதில் வளர்த்துக் கொண்டு வறுமையின் துணையோடு உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மும்பைக்கு சென்றார் ஜெய்ஸ்வால். தங்குவதற்கு இடம் இல்லை. ஆனால் மனதில் சாதிக்கும் வெறி இருந்தது. முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டிக் தார்ப்பாயில் ஒரு குடிசை அமைத்து ஜெய்ஸ்வால் தங்கினார்.

ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட இவர், பானி பூரி கடை ஒன்றில் வேலை‌ பார்த்துள்ளார். வறுமை குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவர், ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களை கண்டு ஏக்கம் அடைந்துள்ளதாகவும், பலரும் பானி பூரி சாப்பிட வரும்போது, தன்னுடைய வறுமையின் கொடுமையை உணர்ந்து வருந்தியதாகவும் தெரிவித்துள்ளார். வறுமையால் துவண்டு சரிந்துகொண்டிருந்த சிறுவனை தூக்கி நிறுத்தியவர் ஜுவாலா சிங். பயிற்சியாளர், காப்பாளர் என ஜெய்ஸ்வாலுக்கு எல்லாமுமாகவும் இருந்தவர். ஜெய்ஸ்வால் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள அனைத்துச் செலவுகளையும் ஏற்றார் பயிற்சியாளர் ஜுவாலா சிங். தனது வீட்டிலேயே ஜெய்ஸ்வாலை தங்கவும் வைத்தார்.

விடா முயற்சியும், அயராத பயிற்சியும் மேற்கொண்ட ஜெய்ஸ்வால், விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் மும்பை அணியில் இடம்பிடித்தார். ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில், இரட்டை சதம் விளாசி மிரள வைத்தார். இதன்மூலம், முதல் தரப்போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால், U19 உலகக்கோப்பை இந்திய அணியிலும் இடம்பிடித்தார். இடம்பிடித்தது மட்டுமல்ல தற்போது அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்து தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஜெய்ஸ்வால்.

ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் அணியிலும் விளையாட இருக்கிறார் ஜெய்ஸ்வால். இளம் வீரர்  ஜெய்ஸ்வாலை ரூ2.40 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. வறுமை, பசி என பல தடைகளை தாண்டியுள்ள ஜெய்ஸ்வால் U19 கிரிக்கெட் போட்டியில் சாதித்து விட்டார். அடுத்து ஐபிஎல்லில் களம் இறங்கும் அவர், தன்னுடைய திறமையை நிச்சயம் வெளிக்காட்டுவார் என ரசிகர்கள் நம்புகின்றனர். நிச்சயம் இந்திய அணியிலும் இடம்பிடித்து பல இளைஞர்களுக்கு ஜெய்ஸ்வால் முன்னுதாரணமாக இருப்பார். வறுமையை வென்று இத்தனை தூரம் வந்துவிட்ட அவருக்கு அது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல.