விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..!

உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..!

Rasus

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நடப்புச் சாம்பியனான ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சியளித்தது மெக்சிகோ அணி. முன்கள வீரர் லொசானோவின் சிறப்பான கோலால் மெக்சிகோ அணிக்கு வெற்றி கைகூடியது.

மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்ற எஃப் பிரிவு ஆட்டத்தில் சர்வதேச தரநிலையில் முதலிடம் வகிக்கும் ஜெர்மனி அணி, 15-ஆவது இடத்தில் உள்ள மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் 35-ஆவது நிமிடத்தில் ஜெர்மனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் மெக்சிகோ அணியின் 22-வயது முன்கள வீரர் ஹிர்விங் லொசானோ. ஹெர்னான்டஸ் கடத்திக் கொடுத்த பந்தை கோல்கீப்பர் மேனுவல் நுயரின் தடுப்பை தகர்த்து வலைக்குள் பாயச் செய்தார் லொசானோ. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பின்னர் ஜெர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தில் மும்முரம் காட்டியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜெர்மனி அணி கோல் அடிக்க பெரும் முயற்சிகள் எடுத்தது. பந்தும் ஜெர்மனி அணியின் கட்டுப்பாட்டிலேயே அதிகம் இருந்தது. ஆனால் ஜெர்மனி அணியின் கோல் முயற்சிகளை மெக்சிகோ வீரர்கள் நேர்த்தியாக முறியடித்தனர். விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1986-ஆம் ஆண்டுக்கு பின் உலகக்கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜெர்மனி அணி வெற்றியை ஈட்ட தவறியிருக்கிறது. ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை மெக்சிகோ அணி ரசிகர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி மகிழ்ந்தனர்.