விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் : புதிய சாதனையை படைத்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

webteam

உலக மல்யுத்த சாம்பியன்சிப்பில் வெண்கலம் பதக்கம் வென்றதையடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்னும் சாதனையை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்சிப்பில் வெண்கலம் பதக்கம் வென்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

2022ஆம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டி செர்பியா நாட்டில் பெல்கிரேடு நகரில் நடைபெற்று வருகிறது. செப் 10ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் செப் 18 தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வெண்கல பதக்கத்திற்கான இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்துகொண்ட போட்டி புதன் கிழமை நடைபெற்றது. அதில் 28 வயதான வினேஷ் போகத் ஸ்வீடன் வீராங்கனை ஜோனா மால்ம்கிரெனை 53 கிலோ எடைபிரிவில் எதிர்கொண்டு ஆடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் ஸ்வீடனின் ஜோனா மால்ம்கிரெனை 8-0 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலம் வென்றார்.

முந்தைய சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற மங்கோலியாவின் குலான் பட்குயாக்கிடம் 7-0 என்ற கணக்கில் அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வியை சந்தித்த நிலையில் இந்தியாவிற்கு பதக்கமே கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பின்னர் மற்றொரு வீராங்கனை தோல்வியடைந்து பதக்கதிற்கான போட்டியை தக்கவைத்த வினேஷ் போகத் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்சிப்பில் வெண்கலம் பதக்கம் பெற்றிருந்த நிலையில், தற்போது 2022 உலக சாம்பியன்சிப்பிலும் வெண்கலம் வென்றுள்ளார். இதனால் உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டிகளில் இரண்டு முறை பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்னும் சாதனையை படைத்துள்ளார் வினேஷ் போகத்.

இந்நிலையில் விளையாட்டு வீரர்களும், நெட்டிசன்களும் வாழ்த்துகள் சாம்பியன் என்று தெரிவித்து வருகின்றனர்.