விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி இனி யாருக்கு..?

டெஸ்ட் போட்டியில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி இனி யாருக்கு..?

webteam

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸியை இந்திய அணி உபயோகப்படுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

டெஸ்ட் போட்டிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 2020ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ளது. இந்த காலத்தில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அணிகள், தங்களின் ஜெர்ஸியில் பெயர் மற்றும் நம்பர் ஆகியவை அணிந்து விளையாடவுள்ளனர். அந்தவகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், முதல் தொடரான ஆஷஸ் தொடருக்கு புதிய டெஸ்ட் ஜெர்ஸியை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இடம்பெறும் முதல் போட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் பெயர் மற்றும் நம்பர் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளனர். டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றுவிட்டதால், அவரின் 7ஆம் நம்பர் ஜெர்ஸியை டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏனென்றால் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரது 10ஆம் நம்பர் ஜெர்ஸியை, ஷர்தல் தாகூர் அணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிசிசிஐ 10ஆம் நம்பர் ஜெர்ஸியை இனி இந்திய அணியில் யாரும் அணிய மாட்டார்கள் என்ற முடிவை எடுத்தது. இது சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்பு செய்யும் விதமாக அமைந்தது. 

அதேபோல தற்போது தோனியின் 7ஆம் நம்பர் ஜெர்ஸியையும் பிசிசிஐ யாருக்கும் அளிக்காமல் தோனிக்கு சிறப்பு செய்யுமா என்ற கேள்வி உதித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இந்திய வீரர்கள் தங்களின் ஒருநாள் தொடரில் விளையாடும் ஜெர்ஸி நம்பர்களையே இந்த டெஸ்ட் தொடரில் அணிந்து விளையாடுவார்கள். தோனி டெஸ்ட் போட்டியில் இல்லாததால் அவரது 7-ஆம் நம்பர் ஜெர்ஸியை வேறு எந்த வீரரும் தேர்வு செய்யமாட்டார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் 7-ஆம் நம்பர் ஜெர்ஸியை மக்கள் தோனியுடன் இணைத்தே பார்த்துள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.