விளையாட்டு

“ஒரு வருடத்திற்கு உலகம் இயங்காது; கிரிக்கெட் மட்டும் எப்படி?” -  சோயிப் அக்தர்

webteam
அடுத்த ஒருவருடத்திற்கு உலகம் இயங்கப்போவதில்லை; அப்புறம் எப்படி கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.  
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.  இவர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக முடங்கிக் கிடக்கும் கிரிக்கெட் உலகத்தின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடும் போது,  “பல நாடுகளில் போதுமான அளவு சோதனை கருவிகள் இல்லாததால் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு கிரிக்கெட் ஆட்டம் தொடங்க வாய்ப்புகள் இல்லை” என்று தெரிவித்துள்ளார். எனவே, அது குறித்து எந்த திட்டமும் செய்ய முடியாது, எந்த தொடரையும் நடத்த முடியாது எனக் கூறியுள்ளார்.  
 
 
"நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியாது. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாத வரையில், எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டத்தையும் எங்கும் நடத்த முடியாது” என்று யூடியூப்-க்கு அளித்த பேட்டியில் அக்தர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர், “கொரோனா வைரஸ் காரணமாகக் குறைந்தது ஒரு வருடத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதை நான் பார்க்கப் போவதில்லை. இந்த வைரஸ் ஒரு வருடம் நம்மைத் தொந்தரவு செய்யும் எனக் கருதுகிறேன். இவை சிக்கலான தருணங்கள்.  இந்த வலியிலிருந்து நாம் வெளியே வருவோம் என்று நம்புகிறேன் ”என்று  கூறியுள்ளார்.
 
 
அதனைத் தொடர்ந்து அவர், "நிலைமை மிகவும் மோசமா உள்ளது. இது பெரிய சூழ்ச்சி. வைரஸ் குறைந்தது ஒரு வருடத்திற்குள் போய்விடும் என நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஒரு வருடத்திற்கு உலகம் இயங்கப்போவதில்லை, அப்படி என்றால் கிரிக்கெட்டை எவ்வாறு தொடங்க முடியும் ”என்றும் கூறியுள்ளார்.