உலகக் கோப்பை காலபந்தாட்டப் போட்டியின் தனது இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியா அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா படுதோல்வியை சந்தித்தது. இந்த்த தோல்வியால் அர்ஜென்டினா அணியின் நாக் அவுட் சுற்றில் விளையாடும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இந்தத் தோல்வி உலகப் புகழ்ப்பெற்ற கால்பந்தாட்ட வீரரான அர்ஜென்டினா மெஸ்ஸிக்கு அதிக அழுத்தத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
உலக்ககோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி, பெனால்டி வாய்ப்பை நழுவ விட்டதால் வெற்றிப்பெற முடியாமல் போய் விட்டது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அர்ஜென்டினா அணி களமிறங்கியது.
போட்டி துவங்கிய முதல் பாதியில் இரு அணிகளும் வலிமையுடன் ஈடுகொடுத்து விளையாடியதால் ஆட்டத்தில் எந்த கோல் கணக்கும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனிடையே போட்டியின் 53-வது நிமிடத்தில் குரோஷிய அணியின் வீரர் ஆன்டீ ரெபிக் தடைகளை கடந்து அர்ஜென்டினாவுக்கு எதிராக தங்கள் அணியின் முதல் கோல் கணக்கை துவக்கி வைத்தார். அடுத்ததாக 80-வது நிமிடத்தில் குரோஷிய அணியின் வீரர் லூகா மோட்ரிக்கும் தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, மைதானத்திலிருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.
மேலும் போட்டியின் கூடுதல் நிமிடத்தில் இவான் ரகிடீக் அசத்தலான கோல் அடித்து குரோஷியா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் நட்சத்திர வீரர் மெஸ்சி இருந்தும் அர்ஜென்டினா அணி தோல்வியை தழுவியிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் குரோஷிய அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது.