D Gukesh PT
விளையாட்டு

7 வயதில் தொடங்கிய செஸ் பயணம்.. நனவானது லட்சியக் கனவு.. யார் இந்த குகேஷ்?

மார்ச் 2017-ல், 34வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றவர், 2023-ல் 2750 ரேட்டிங்கைப் பெற்று செஸ் உலகை திரும்பிப் பார்க்கவைத்தார் குகேஷ்.

Jayashree A

தமிழகத்தைச்சேர்ந்த 18 வயதேயான இளம் செஸ் விளையாட்டு வீரரான டி குகேஷ், சீனாவின் நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி புதிய உலக சாம்பியனாக மாறி இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். தமிழக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலக சாம்பியனான இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையோடு, செஸ் விளையாட்டு வரலாற்றில் இளம் வயதில் உலக சாம்பியனானவர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை செஸ் போட்டி என சொன்னாலே தமிழ்நாடுதான் நினைவுக்கு வரும். ஏனென்றால் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் அந்தளவுக்கு பல சாதனைகளை புரிந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 85 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 29 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதே இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதே போல் 23 பெண் கிராண்ட் மாஸ்டர்களில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் உள்ளனர். அதிலும் தற்போது ஆக்டிவாக உள்ள முதல் 10 ஆண் கிராண்ட் மாஸ்டர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பெண்களில் 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பதே செஸ் விளையாட்டில் தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றுகிறது.

அதிலும் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தின் கால்தடத்தை பின்தொடர்ந்து, தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் புதிய உலக சாம்பியனாக தன்னை மாற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

குகேஷை பொறுத்தவரையில் 2006-ம் ஆண்டு மே 29-ம் தேதி சென்னையில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் ரஜினிகாந்த் ENT ஸ்பெஷலிஸ்ட். அவரது தாயார் டாக்டர் பத்மா ஒரு நுண்ணுயிரியல் நிபுணர். சிறுவயதிலிருந்தே செஸ் விளையாடுவதில் ஆர்வம் காட்டிய குகேஷ், ஏழு வயதிலிருந்து செஸ் விளையாட்டை கற்க ஆரம்பித்துள்ளார். இவரது செஸ் ஆர்வத்தை கண்ட பயிற்சியாளர்கள், தொடர்ந்து இவருக்கு பயிற்சி அளித்து வந்ததுடன், பல போட்டிகளில் பங்கேற்க வைத்தனர்.

பல்வேறு செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களில் பங்கேற்று விளையாடிய குகேஷ், 2015-ம் ஆண்டு 9 வயதில், ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்று சாதித்தார். அந்த வெற்றியைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று மகுடம் சூடினார்.

அதேபோல 12 வயதில், 2018 ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில் யு12 தனிநபர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியிலும், யு12 குழுவாக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் மற்றும் யு12 தனிநபர் கிளாசிக்கல் என ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

அதுமட்டுமில்லாமல் மார்ச் 2017-ல், 34வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெற்றவர், 2023-ல் 2750 ரேட்டிங்கைப் பெற்று செஸ் உலகை திரும்பிப் பார்க்கவைத்தார்.

இவரது திடமான மனநிலையும், விடாமுயற்சியுமே 2024-ல் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரனுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப்பில் விளையாட இவருக்கு இடத்தை தேடிக்கொடுத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தற்போது புதிய உலக செஸ் சாம்பியனாக மாறி உலகையே திரும்பிப் பார்க்க உள்ளார்.

இந்த இளம் சாம்பியன் செஸ் உலகில் ராஜாக்களின் ராஜாவாக மகுடம் சூடியுள்ளார்! வாழ்த்துக்கள் உலக சாம்பியன் குகேஷ்!