விளையாட்டு

`2023-ல் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன்’- பிரபல டென்னிஸ் வீராங்கனை சொன்ன சந்தோஷமான காரணம்!

webteam

"இந்த ஆண்டில் எந்தப் போட்டிகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை” என ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒசாகா தெரிவித்துள்ளார்.

நான்கு முறை ஒற்றையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஒசாகா, தற்போது அமெரிக்காவில் வசித்துவருகிறார். 25 வயதான ஒசாகா, கடந்த செப்டம்பருக்குப் பிறகு எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை. மேலும், 2023 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு, தாம் எந்தவிதப் போட்டிகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

அதற்குக் காரணம், அவர் கர்ப்பமாக இருப்பதுதான். 2019ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் கார்டே டன்ஸ்டனை காதலித்து வரும் ஒசாகா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். விரைவில், அவர்களுக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ளது. இதையடுத்தே அவர் தொடர்ந்து எந்தப் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர், ”எதிர்காலத்தில் நான் சாதிப்பதற்கு நிறைய உள்ளது என்று தெரியும். என் குழந்தை என் போட்டிகளைப் பார்க்க வேண்டும். என் விளையாட்டைப் பார்த்து அது, மற்றவர்களிடம் ’அவர் என் அம்மா’ என்று சொல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த வருடம், எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும் என நினைக்கிறேன். 2024 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன். வாழ்க்கையில் சரியான பாதை என்று எதுவுமில்லை. ஆனால் நல்ல எண்ணங்களுடன் இருந்தால் உங்களுக்கான வழியைக் கண்டடைவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டில் உலக டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஒசாகா, தற்போது தரவரிசையில் 47வது இடத்தில் உள்ளார். அவர், 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நான்கு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களையும் வென்றவர் ஆவார். மேலும், 2022ஆம் ஆண்டில் அதிக வருமானம (ரூ. 417 கோடி) ஈட்டிய வீராங்கனை என ஒசாகாவை ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டிருந்தது.

குழந்தை பெற்றபிறகும் மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பி பல வீராங்கனைகள் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா, செரீனா வில்லியம்ஸ், விக்டோரியா அசரென்கா மற்றும் கிம் கிளிஸ்டர்ஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம். அந்த வகையில் ஒசாகாவும் குழந்தை பெற்றபிறகு களத்தில் சாதிப்பார் என்றே நம்பலாம்.