விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி 5-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

Rasus

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் ஹீலே 39 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 115 ஆக இருந்தபோது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார் ஹீலி. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் 16 ரன்னில், தீப்தி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கார்ட்னர் 2 ரன்களில், தீப்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெயன்ஸூம் 4 ரன்களில் பூனம் யாதவ் சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையும் அதிரடியாகவும் விளையாடிய மூனி 54 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை சேர்த்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது.

இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா வெறும் இரண்டு ரன்களில் நடையை கட்டினார். இதுவே இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. 2 பவுண்டரிகள் விளாசி சிறிது நம்பிக்கையை கொடுத்த மந்தானாவும் வெறும் 11 ரன்களில் வெளியேற இந்திய அணியின் நிலை கவலைக்குரியதானது.

அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 99 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா மகளிர் அணி, டி20 உலகக்கோப்பையில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் எடுத்தார். முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றுவிடும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்ளுக்கு போட்டியின் முடிவு பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.