விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தான் 150 ரன்கள் இலக்கு.. முதல் வெற்றியை ருசிக்குமா இந்திய அணி?

webteam

மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணி 150 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கியது. வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில், குரூப் 1 பிரிவில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும், குரூப் 2இல் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும். இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. அதன்படி, இன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் துணை கேப்டனான மந்தனா இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் தொடக்க பேட்டர்களான முனிபா அலியும் ஜவேரியா கானும் விரைவிலேயே பெவிலியன் திரும்பியபோதும் கேப்டன் மரூப் மட்டும் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்களையும், தீப்தி சர்மா மற்றும் பூஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

- ஜெ.பிரகாஷ்