உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
மகளிர் உலக குத்துச் சண்டை போட்டிக்கான காலிறுதி ஆட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் 48 கிலோ பிரிவில் பிரபல குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம், சீனாவின் வு யூ-வை எதிர்த்து களம் கண்டார். போட்டியின்போது அதிரடியாக குத்துவிட்ட மேரி கோம், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் ஆடிவரும் மேரி கோம், இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை வாங்கியுள்ளார். தற்போது 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ள மகிழ்ச்சியில் இருக்கிறார் மேரி கோம். உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டையில் கடைசியாக மேரி கோம் பதக்கம் வென்றது 2010-ஆம் ஆண்டில்தான். தற்போது 8 வருடங்களுக்கு பின் மீண்டும் பதக்கத்தை கையில் ஏந்த உள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் குத்துச் சடையில் அயர்லாந்தை சேர்ந்த கேத்தி டெய்லர் 6 பதக்கங்கள் வாங்கியுள்ளது தான் இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை மேரி கோம் முறியடித்து உள்ளார். அரையிறுதி ஆட்டத்தில் வட கொரியாவை சேர்ந்த கிம் கியாங் மி உடன் மேரி மோம் மோத உள்ளார்.