விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை பயிற்சி போட்டி: ஸ்மிருதி மந்தனாவின் தலையை பதம் பார்த்த பவுன்சர்!

EllusamyKarthik

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய போது பவுன்சராக வீசப்பட்ட பந்து அவரது தலையை தாக்கியது. நியூசிலாந்து நாட்டில் வரும் மார்ச் 4 தொடங்கி ஏப்ரல் 3 வரையில் மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. 

அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின. அந்த ஆட்டத்தில்தான் மந்தனாவின் தலையை பவுன்சர் ஒன்று பதம் பார்த்தது. தொடர்ந்து அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மந்தனாவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என உறுதி செய்துள்ளனர். அதனால் அவர் உலகக் கோப்பை தொடரில் அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ளது. இருந்தாலும் அடுத்த பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றே தெரிகிறது. இந்திய அணி வரும் மார்ச் 6-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது. 

கடந்த 2017 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியாவுக்காக 64 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2461 ரன்கள் எடுத்துள்ளார் மந்தனா. இதில் 4 சதங்களும் அடங்கும்.