வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை அஸ்வின் சாய்த்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 294-வது டெஸ்ட் வீரராக அவர் களமிறங்கி யுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில், காயம் காரணமாக கடந்த போட்டியில் பங்கேற்காத கேப்டன் ஜேசன் ஹோல்டர் அணிக்குத் திரும்பியுள்ளார். சுழல் பந்துவீச்சாளர் பிஷூவுடன் மற்றொரு சுழல் பந்துவீச்சாளராக ஜோமல் வெரிகன் இணைந்துள்ளார். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி பிராத்வெயிட்டும் பாவெல்லும் களமிறங்கினர்.
11.1 ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் பாவெல் ஜடேஜாவின் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 22 ரன்கள் எடுத்தார். பிராத்வெயிட் 12 ரன்னுடனும் ஹோப் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். 15 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.