விளையாட்டு

நியூசி. பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட்: மழையால் பாதிப்பு!

webteam

நியூசிலாந்து- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வில்லியம்சன் சிறப்பாக ஆடி சதமடித்தார். போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து வீரர்கள் குப்திலும் முன்றோவும் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ஆடினர். பஹர் ஜமான் பந்துவீச்சில் குப்திலும் (48)  ஹசன் அலி பந்துவீச்சிலும் முன்றோ (58) ஆட்டம் இழக்க, அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த நிக்கோலஸ் வேகமாக அரை சதம் அடிக்க, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள், நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணி 30 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமாம் 82 ரன்களுடனும் அஸ்ரப் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் சவுதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.