இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் ஆகியோரைப் பின்பற்ற முடிவு செய்துள்ளதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் டி-20 அணி கேப்டன் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் விளையாடுகிறது. சர்ஃபராஸ் அகமது இல்லாமல் செல்லும் அந்த அணியின் புதிய கேப்டன் பாபர் அஸாம், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கேப்டன் பொறுப்பு தனக்கு அழுத்தத்தைக் கொடுக்காது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ’இலங்கை அணியுடன் நடந்த தொடரில், மோசமான தோல்வியை தழுவியது உண்மைதான். சந்தேகம் இல்லை. அந்த தொடரில் துணை கேப்டனாக இருந்தேன். அந்த ஒரு தொடரை மட்டும் வைத்து, எனது ஆட்டத் திறனை மதிப்பிட்டுவிட முடியாது. கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்ற இறக்கம் இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் 120 சதவிகித உழைப்பைக் கொடுக்கிறேன். கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. தொடர்ந்து எனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். கேப்டன் பொறுப்பில் நியூசிலாந்தின் கேப்டன் வில்லியம்சன், இந்தியாவின் விராத் கோலி ஆகியோரைப் பின்பற்ற இருக்கிறேன். அவர்கள் எப்படி தங்கள் ஃபார்மையும் அணிக்கான வெற்றியையும் தொடர்கிறார்களோ, அதை தொடர முயற்சி செய்வேன்’ என்றார்.
ஆஸ்திரேலிய தொடர் பற்றி கூறும்போது, ‘பந்துவீச்சு எங்கள் பலம். ஆஸ்திரேலிய அணிக்கு எங்கள் பந்துவீச்சாளர்கள் கடும் சவால் கொடுப்பார்கள். இந்த தொடரில் பஹார் ஜமானுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறேன்’ என்றார்.