கொரோனா பரவலுக்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? ஒலிம்பிக் ஆரம்பமாக இன்னும்
மட்டுமே உள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டிலும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் சுமார் 83368 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மேற்கோள் காட்டி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும் என ஜப்பான் நாட்டின் மருத்துவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மறுபக்கம் பாதுகாப்பான முறையில் போட்டிகளை திட்டமிட்டப்படி நடத்தலாம் என்கிறது ஒலிம்பிக் ஒருங்கிணைத்து நடத்தும் குழுவினர்.
இந்த சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த தேதியில் ஆரம்பமாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் டோக்கியோ ஒலிம்பிக் 2020 என்ற பெயரில் ஒலிம்பிக் ஈவண்ட் தொடர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் ஒலிம்பிக் நடத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளதா?
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பின், பேரண்டத்தின் மெகா விளையாட்டு தொடரான 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் ஆரம்பமாக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலினால் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 1916, 1940 மற்றும் 1944இல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை. அது தவிர்த்து இருபத்தெட்டு முறை ஒலிம்பிக் தொடர்கள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பங்கேற்கும் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளின் அழுத்தம் காரணமாக ஜப்பான் - டோக்கியோவில் நடக்க திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்த நிலையில் தான் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. பன்னாட்டு வீரர்கள் டோக்கியோவில் அமைந்துள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்து அவரவர் போட்டிகளில் விளையாட உள்ளன. பன்னாட்டு வீரர்கள் வருவது ஜப்பானின் நிலையை மேலும் சிக்கலாக்கிவிடும் என சொல்லி ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும் என ஜப்பான் நாட்டின் மருத்துவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஜப்பானில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பது என்பது எட்டாத நிலையாக உள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வாழ்கின்றன. ஜப்பானின் மூன்றாவது பெரிய நகரமான ஒசாகாவில் இந்த நிலை தான் நீடிக்கிறது. டோக்கியோவில் இதே நிலை தான் மருத்துவர்களும், மக்களும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர்.
“தினந்தோறும் ஜப்பானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் ஜப்பானுக்கு வந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பது யதார்த்தத்தில் மிகவும் கடினம். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது சவாலானது” என டோக்கியோ மருத்துவ சங்கத்தின் தலைவர் ஹாரூ ஓசாகி தெரிவித்துள்ளார்.
போட்டிகள் நடைபெற்று முடிந்த பிறகு உலக நாடுகளில் தொற்று பரவ ஜப்பான் முக்கிய காரணமாகவிடும் என்றும் இந்த நிலையை உருவாக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அமைப்பு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி என்ன சொல்கிறது?
இப்படி ஜப்பான் மக்களும், மருத்துவர்களும் ஒலிம்பிக் இப்போதைக்கு வேண்டாம் என சொல்லி வரும் நிலையில் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்பதை இதுவரை சொல்லி வருகிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. போட்டிகளில் நிறுத்துவது அல்லது ஒத்திவைப்பது தொடர்பாக எந்த முடிவு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
அதே நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் இதில் எந்தவிதமான நடைமுறை சிக்கலும் இல்லை. முழுவதும் பாதுகாப்பான முறையில் பயோ செக்யூர் பபுளில் பார்வையாளர்களின் அனுமதியின்றி நடைபெற உள்ளது. தவிர வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அதனால் இதில் எந்தவித சிக்கலும் இல்லை என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஜூன் மாதத்தின் இறுதி வரையில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து முடிவெடுக்க அவகாசம் உள்ளதாம். அதனால் இப்போது அது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
Stop Tokyo Olympics என்ற முழக்கமும் ஆன்லைன் பெட்டிஷன் மூலமாகவும் ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு பிரச்சாரமாக கிளம்பியுள்ளது. “ஒலிம்பிக் உலகமே கொண்டாட வேண்டிய விளையாட்டு. ஆனால் ஜப்பான் இப்போதைக்கு வீரர்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்று, போட்டியை நடத்தும் நிலையில் இல்லை. அதனால் ஒலிம்பிக் இப்போதைக்கு வேண்டாம். மக்களின் உயிரை காப்போம்” என இந்த பிரச்சாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது.
உலகம் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட்டால் தான் அனைத்திற்கும், அனைவருக்கும் நன்மை சேரும்.
- எல்லுச்சாமி கார்த்திக்