விளையாட்டு

விராட் கோலி, டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பாரா ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர்?

விராட் கோலி, டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பாரா ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர்?

ச. முத்துகிருஷ்ணன்

நடப்பு ஐபிஎல் சீசனில் அபாரமாக விளையாடி வரும் ஜோஸ் பட்லர், நீண்ட நாட்களாக முறியடிக்கப்படாமல் இருக்கும் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிளைமாக்ஸை எட்டியுள்ள ஐபிஎல் 2022 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர், நான்கு சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்களுடன் 59 சராசரியில் 824 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியுடன் அவர் இந்த சீசனை முடிப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

முறியடிக்கப்படுமா வார்னரின் சாதனை?

ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் டேவிட் வார்னரின் இடத்தைப் பிடிக்க பட்லருக்கு இன்னும் 25 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். 2016 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக வார்னர் 848 ரன்கள் குவித்துள்ளார். எட்டக்கூடிய தூரத்தில் உள்ள இந்த ஸ்கோரை பட்லர் இன்றைய இறுதிப் போட்டியில் எட்டி, ஆறு ஆண்டு காலமாக முறியடிக்கப்படாமல் உள்ள வார்னரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறியடிக்கப்படுமா கோலியின் சாதனை?

ஒரே சீசனில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. 2016 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக 973 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தார் கோலி. அவரின் ஆல் டைம் சாதனையான இதை முறியடிக்க பட்லருக்கு இன்னும் 150 ரன்கள் தேவை என்பதால் இந்த சீசனிலும் கோலியின் சாதனை முறியடிக்கப்படாமலேயே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.