பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வலுவான நிலையில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 47 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இந்நிலையில் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 8 வெற்றி, ஒரேயொரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் குஜராத் இன்று களமிறங்குகிறது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை தோற்றாலும்கூட, அந்த அணியின் முதலிடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் இப்போட்டியில் நெருக்கடியின்றி அதிரடியாக ஆட முயற்சிக்கும். பேட்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா (308 ரன்கள்), டேவிட் மில்லர் (276 ரன்கள்), சுப்மான் கில் (260 ரன்கள்) ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (14 விக்கெட்), லோக்கி பெர்குசன் (10 விக்கெட்), ரஷித் கான் ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.
மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 8ஆம் இடத்தில் பின்தங்கியுள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் அந்த அணி மூன்றில் தோற்றிருக்கிறது. ஷிகர் தவான் (307 ரன்கள்), லிவிங்ஸ்டன், மயங்க் அகர்வால், பேர்ஸ்டோ, பானுகா ராஜபக்சே ஆகியோர் பேட்டிங்கில் ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் அந்த அணி பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் காஜிசோ ரபடா, ராகுல் சாஹர் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். ஏற்கனவே குஜராத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி அதற்கு பழிதீர்த்து, ப்ளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க தீவிரம் காட்டும். டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், பிரதீப் சங்வான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி
பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் சர்மா