விளையாட்டு

ஒப்பந்தத்தை மீறுவதா? மலிங்கா மீது ஒழுங்கு நடவடிக்கை

webteam

ஒப்பந்தத்தை அடிக்கடி மீறியதால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. ‘இலங்கை அணியின் தோல்விக்கு வீரர்கள் உடல் தகுதி பிரச்சினை காரணமா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும்’ என்று இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா அறிவித்திருந்தார். இதுபற்றி டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ’கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்’ என்று உவமையாக குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரிய கூட்டம் இன்று நடந்தது. இதில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் போர்டு ராஜினாமா செய்தது, அடுத்த பயிற்சியாளரை நியமிப்பது, மலிங்கா விவாகரம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் மலிங்கா, ஒப்பந்தத்தை மீறி மீடியாவுக்கு பேட்டிக் கொடுத்ததாகவும் அடிக்கடி ஒப்பந்தத்தை மீறியதாகவும் கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.