விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ? டாஸ் வென்று பவுலிங்க் தேர்வு

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ? டாஸ் வென்று பவுலிங்க் தேர்வு

ச. முத்துகிருஷ்ணன்

இன்றைய ஐபிஎல் போட்டியில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் லக்னோ அணியும், கடந்த தோல்வியிலிருந்து மீண்டெழும் தாகத்துடன் டெல்லி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 15-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுக அணியாக இடம் பிடித்துள்ள கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

முந்தைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிரான ஆட்டத்தில் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் தீபக் ஹூடாவின் அரை சதமும், கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் வெற்றிக்கு வழிவகுத்தது. அதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 211 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியது சூப்பர் ஜெயண்ட்ஸ். தற்போது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது லக்னோ அணி.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 7-ம் இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த டெல்லி அணி அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தனிமைப்படுத்துதலை முடித்துவிட்டு பயிற்சிக்கு திரும்பியுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர், வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ஜே ஆகிய இருவர் இன்றைய ஆட்டத்தில் விளையாட இருப்பது டெல்லி அணிக்கு மேலும் வலுச்சேர்க்கும்.

மும்பையில் இரவில் நிலவும் பனியின் தாக்கம் காரணமாக பெரும்பாலும் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.