விளையாட்டு

''கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை'' கவலை தெரிவிக்கும் மொயின் அலி!

''கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை'' கவலை தெரிவிக்கும் மொயின் அலி!

jagadeesh

இந்திய கேப்டன் விராட் கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் 'ஈஎஸ்பின் கிரிக்இன்போ" இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ள மொயின் அலி "விரோட் கோலியை எப்படி அவுட்டாக்குவது? அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன், உலகத்தரம் வாய்ந்தவர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பின்பு அவருக்கு உத்வேகம் மேலும் அதிகரித்திருக்கும். அவரை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு பலவீனமே இல்லை. ஆனால் எங்களிடம் திறமை வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள்" என்றார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சாலஞ்ஜர்ஸ் அணிக்காக விராட் கோலியுடன் விளையாடிய அனுபவம் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த மொயின் அலி "அவர் பிரமாதமான மனிதர், என்னுடைய நண்பர். நாங்கள் இருவரும் கிரிக்கெட் குறித்து அவ்வளவாக பேசமாட்டோம்" என்றார்.