விளையாட்டு

"நீங்க சச்சின் டான்ஸ் ஆடி பார்த்ததில்லையே"- ஹர்பஜன் சிங்கின் நினைவலைகள் !

jagadeesh

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அந்த இரவில் சச்சின் நடனமாடியதை தன்னால் மறக்கவே முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இரண்டாவது முறையாக தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை, ஜாம்பவான் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கருக்கு மிக முக்கியமானது. 1992 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று வருகிறார் சச்சின் டெண்டுல்கர். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சச்சின் பங்கேற்ற 6 ஆவது உலகக் கோப்பையாகும்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி வீரர்கள் பலரும் சச்சினுக்காக இந்த முறை கோப்பையை வெல்வோம் என கூறினர். அதேபோல தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. உலகக் கோப்பையையும் சச்சினையும் தூக்கி வைத்துக்கொண்டு மும்பை வான்கடே மைதானம் முழுவதும் வலம் வந்தனர் இந்திய வீரர்கள்.

இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் விவரித்துள்ளார் ஹர்பஜன் சிங். அதில் "அன்றுதான் சச்சின் முதல்முறையாக நடனமாடியதைப் பார்த்தேன். முதல்முறையாகத் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர் ஆடினார். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்" என்றார்.

மேலும் தொடர்ந்த ஹர்பஜன் சிங் " அன்றிரவு தூங்கும்போது எனக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தை கழுத்தில் மாட்டியவாறே தூங்கினேன். அடுத்த நாள் காலையில், படுக்கையில் என் அருகில் பதக்கம் இருந்தது. அதைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது. அது நடந்தபோது மறக்க முடியாத அனுபவமாக மாறியது. இப்போதும் அதை நினைத்துப் பார்த்தால் எனக்கு அப்படியே சிலிர்க்கும். உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியபோது அனைவரின் முன்பும் நான் அழுதேன்" என்றார் அவர்.