விளையாட்டு

ஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடும் வீரர்கள்... அதற்கு இப்படியொரு காரணமா?

EllusamyKarthik

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலக உருண்டை இப்போது தான் மெல்லமாக இயல்பு நிலை நோக்கி சுழல ஆரம்பித்துள்ளது. 

மிகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்து பயோ பபுலில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களை வெற்றிகரமாக கொரோனா பொது முடக்கத்தை அடுத்து நடத்தியுள்ளது.

அந்த தொடர்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிறைய விஷயங்களுக்கு தடை போடப்பட்டது. அதே வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமீரகத்தில் ஐபிஎல் தொடரை பி.சி.சி.ஐ நடத்தி வருகிறது. 

இந்நிலையில், ஆடுகளத்தில் ஃபீல்டிங் செய்யும் அணியின் கேப்டன்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளை போட்டுக் கொண்டு விளையாடுவதை ஸ்பாட் செய்த ரசிகர்கள் அதன் ரகசியத்தை அறிய முனைந்தனர். அதனால் சமூக வலைத்தளங்களில் விவாதமே நடத்தினர். 

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்சும், இங்கிலாந்து கேப்டன் மோர்கனும் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் களத்தில் ஃபீல்ட் செய்ததை கவனிக்க முடிந்தது. 

அதே போலவே நடப்பு ஐபிஎல் சீசனிலும் வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளை போட்டுக் கொண்டு விளையாடுகின்றனர்.

அதற்கான காரணம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. 

வீரர்கள் அவர்களது சன் கிளாஸ், தொப்பி, டவல் மாதிரியானவற்றை அம்பயரிடமோ அல்லது களத்தில் உள்ள சக அணி வீரர்களிடமோ கொடுக்க கூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதனை அணியின் கேப்டன் பொறுப்பில் ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால் வீரர்கள் களத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளுடன் விளையாடுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஐபிஎல் தொடரில் கேப்டன்கள் மட்டுமல்லாது வீரர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொப்பிகளை போட்டுக் கொண்டு விளையாடுவதை ஸ்பாட் செய்ய முடிகிறது.