ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரையும் இழந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவுக்கு பிரகாசித்தாலும் பவுலிங்கில் அகலபாதாளத்துக்கு சென்றுள்ளது. என்னதான் "Flat Pitch" ஆக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 374 ரன்களும், இரண்டாவதுப் போட்டியில் 389 ரன்களையும் எடுத்தது. இதிலிருந்தே நாம் இந்திய அணியின் ஒட்டுமொத்த பவுலிங்கும் எப்படி இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.
நேற்றையப் போட்டியில் அதிகபட்சமாக பும்ரா 10 ஓவர் வீசி 79 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. முகமது ஷமி 9 ஓவர் வீசி 73 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதில் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மிக மோசமாக பந்துவீசினார். அவர் 7 ஓவர்கள் வீசி 70 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதேபோல சஹால் 9 ஓவர்கள் வீசி 71 ரன்களும் கொடுத்தார்.
இதில் ஓரளவுக்கு ரவீந்திர ஜடேஜா 10 ஓவர் வீசி 60 ரன்களை விட்டுக்கொடுத்தார். பேட்ஸ்மேனான மயாங்க் அகர்வால் 1 ஓவர் வீசி 10 ரன்கள் கொடுத்தார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின்பு பந்துவீசி ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர் வீசி 24 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதில் கவலையளிக்கும் விஷயம் என்றால் "டெத் ஓவர்" ஸ்பெஷலிஸ்டான பும்ரா மிகவும் மோசமான பார்மில் இருப்பதுதான். அவரால் யார்க்கர் சரியாக வீச முடியவில்லை.
மேலும் சரியான லென்தில் பந்தை வீச முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார் பும்பா. ஐபிஎல்லில் புயல் போல பாய்ந்த பும்ரா இப்போது திணறி வருவது கவலை தரும் விஷயமாக மாறி வருகிறது. பும்ரா ஒரு பக்கம் இப்படி கஷ்டப்படும் நிலையில் இன்னொரு பக்கம் சாஹலும் சரியாக பந்து வீச முடியாமல் திணறி வருகிறார். பெரிய அளவில் விக்கெட் எடுக்க முடியாமல் அல்லது ரன் செல்வதை கட்டுப்படுத்த முடியாமல் சாஹல் திணறி வருகிறார். முகமது ஷமி மட்டுமே கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார்.
இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஐபிஎல் ஹீரோ என கபில் தேவால் புகழப்பட்ட தமிழக வீரர் நடராஜனை சேர்க்காதது ஏன் என ரசிகர்கள் சராமாரியான கேள்வியை முன்வைத்திருந்தனர். இதற்காக நேற்று ட்விட்டரில் #Natarajan தேசியளவில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு காரணம் நவ்தீப் சைனியின் மோசமான பவுலிங். இந்தத் தொடர் ஆரம்பிக்கும் முன்பே சைனி சரியான உடல்தகுதியில் இல்லை என கூறப்பட்டது. ஆனாலும் அவரை அணியில் சேர்த்தார் கோலி. அது ஏன் என்று இதுவரை தெரியவில்லை. ஒருவேளை சைனி ஆர்சிபி அணியில் இருப்பதால் கோலி அவரை சேர்த்தாரா என பலரும் சந்தேகம் தெரிவித்தனர்.
கடைசி ஒருநாள் போட்டியிலாவது நடராஜனை சேர்க்க வேண்டும். சைனியை விட நடராஜன் நல்ல பவுலர். நன்றாக ஸ்விங் செய்வார், யார்க்கர் போடுவார். இதன் மூலம் கடைசிப் போட்டியிலாவது இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.