கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் மொராக்கோ அணியின் வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆம், 24 வயதான ஹக்கிமி, காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனல்டி சூட்-அவுட் முறையில் கோல் அடித்து மொராக்கோ அணி முதன் முறையாக காலிறுதிக்குள் நுழைய காரணமாக இருந்தார்.
கோல் அடித்த பிறகு மைதானத்தின் ரசிகர் கூட்டத்தில் அமர்ந்திருந்த தனது தாயை தேடிச் சென்று இந்த வெற்றியை அவருடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஸ்பெயின் நாட்டில் பிறந்து வளர்ந்த ஹக்கிமி, தனது தாய்நாடான மொராக்கோ அணிக்காக விளையாட முடிவு செய்து, மொராக்கோ அணியின் அட்லஸ் லையன் என்ற அணிக்கு விளையாடினார்.
இதையடுத்து லாலிகா போட்டிகளில் ரியல் மேட்ரிட் அணியில் அறிமுகமானார். படிப்படியாக கால்பந்து விளையாட்டில் தன்னை வளர்த்துக் கொண்ட ஹக்கிமி, கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் ரோல்மாடலாக விளங்கினார். தெருவோர வியாபாரியான அப்பாவுக்கும், வீடுகளை சுத்தம் செய்யும் அம்மாவுக்கும் பிறந்த நான், அவர்கள் செய்த தியாகத்திற்காக நான் நாள்தோறும் போராடுகிறேன் என்று சொல்லும் ஹக்கிமி, சிறுவயது முதலே முதன்மையாக வீரராக இருந்துள்ளார்.
தனது எட்டு வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கிய அவர், பல போராட்டங்களுக்குப் பிறகே தனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது. இதன் மூலம் ஹக்கிமி மொராக்கோ அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். தனது 24-வது வயதில் மொராக்கோ சீனியர் அணியில் இடம்பிடித்த அவர், அந்த அணிக்காக 58 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் ஹக்கிமி 8 கோல்களை அடித்ததோடு 8 கோல்கள் அடிக்க காரணமாகவும் இருந்துள்ளார்.
கால்பந்து போட்டிகளில் சிறந்த தடுப்பு ஆட்டக்காரரான இவர், முன்னோக்கிச் சென்று கோல் அடிப்பதிலும் வல்லவராக இருந்துள்ளார். தனது கடுமையான உழைப்பால் உயர்ந்த இவரின் திறமைக்கு, ஸ்பெயின் அணிக்கு எதிராக அடித்த பெனால்டி கோலையும் சொல்லலாம். திறமையான வீரரான இவர், மேலும் தனது திறமையை வெளிப்படுத்தி போர்ச்சுகல் அணிக்கு எதிரான காலிறுதி போட்டியில் வென்று தனது அணியை அரையிறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.