விளையாட்டு

தொடரை வெல்லப்போவது யார்? 5வது முறையும் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா!

தொடரை வெல்லப்போவது யார்? 5வது முறையும் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா!

ச. முத்துகிருஷ்ணன்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. கடைசி இரு ஆட்டங்களிலும் இந்திய அணி பந்து வீச்சில் சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அக்சர் படேல், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல் துல்லியமாகப் பந்துவீசி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.

பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா நல்ல ஃபார்மில் உள்ளனர். தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் பொறுப்புடன் நிலைத்து ஆடும் பட்சத்தில் இந்திய அணி 200 ரன்களை எளிதாக குவிக்க இயலும்.

முதல் இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் மிரட்டிய தென் ஆப்பிரிக்க அணி கடைசி இரு ஆட்டங்களிலும் தொடர்ந்து சொதப்பியது. ஆனாலும் தென் ஆப்பிரிக்காவை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணி மறுபடியும் மிரட்ட முயற்சிக்கலாம். இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

குறைவான பவுண்டரி தூரத்தை கொண்ட பெங்களூரு சின்னச்சாமி மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும். இன்றும் அதுபோல பேட்ஸ்மேன்களின் வான வேடிக்கைக்கு தயாராகுங்கள் என்றே வர்ணனையாளர்களும் தெரிவித்துள்ளனர். போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்.

தென்னாப்பிரிக்க அணி: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே.