விளையாட்டு

சச்சினும் கோலியும் ஒன்னா ? சமூகவலைத்தளத்தில் 80's vs 20's கிட்ஸ் மோதல் !

சச்சினும் கோலியும் ஒன்னா ? சமூகவலைத்தளத்தில் 80's vs 20's கிட்ஸ் மோதல் !

இளையராஜாவா - ஏ.ஆர்.ரகுமானா யார் பெஸ்ட் ? இரண்டு பேருமே இல்லைங்கே எஸ்.எஸ்.விஸ்வநாதன்தான் என ஒரு ரசிகர் வந்து சொல்லிட்டு போய்கிட்டே இருப்பார். திரைப்பட இசைத் துறையில் இந்த விவாதம் சுமார் கால் நாற்றாண்டுகளாகவே நடந்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், உண்மையில் அவரவர் காலக் கட்டத்தில் எம்.எஸ்.வி., இளையராஜா, ரகுமான் ஆகியோர்தான் பெஸ்ட், இதில் மாற்று கருத்தே இல்லை. அப்படித்தான் இப்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கின்றனர் சச்சின் டெண்டுல்கரும், விராட் கோலியும். கோலி அண்மையில் குறைந்த எண்ணிங்ஸில் 10 ஆயிரம் ரன்களை எட்டினாலும் எட்டினார் சச்சினை விட விராட் கோலிதான் பெஸ்ட் என 20's கிட்ஸும், சச்சின்தான் சிறந்த பேட்ஸ்மேன் அவர் போல யாரும் இல்லை என 80's, 90's கிட்ஸும் சமூக வலைத்தளங்களை கலவரமாக்கி வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், 81 ரன் எடுத்த போது விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இந்தச் சாதனையை வெறும் 205 இன்னிங்ஸில் கோலி எட்டியுள்ளார். இதில் தனது கடைசி ஆயிரம் ரன்களை வெறும் 11 இன்னிங்சில் அவர் அடித்துள்ளார். 10 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் 13 வது வீரராக விராட் கோலி இடம் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, தோனி, ராகுல் டிராவிட் ஆகியோரை தொடர்ந்து தற்போது 5வது வீரராக அவர் 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸில் 10 ஆயிரம் ரன்களை எட்டியதை இதுவரை சாதனையாக இருந்தது. சச்சினின் அந்தச் சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்.

இப்போது தெரிகிறதா 20's கிட்ஸ் ஏன் கோலியை கொண்டாடுகிறார்கள் என்று. கோலி சச்சினைவிட குறைந்த இன்னிங்ஸில் இந்தச் சாதனையை படைத்ததுதான் காரணம். கோலி இந்தச் சாதனையை நிகழ்த்தியவுடன், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் கோலியை விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்ததற்கு வாழ்த்தினார். அப்போது 80,90's கிட்ஸ் சச்சினை ஏகத்துக்கும் புகழ்ந்துதள்ளியது. திரைப்படத் துறையில் ரஜினி போல கிரிக்கெட்டுக்கு சச்சின். அவர்தான் அனைவரையும் பாராட்டுவார். இதுபோன்ற நல்ல மனம் யாருக்கு வரும் என புகழ்ந்தனர்.

இதெல்லாம் நன்றாக அன்பாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் பிரச்சனை இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் சேனலினால் ஆரம்பித்தது. போட்டியின் போது ரசிகர்களுக்கு ஒரு கேள்வி கேட்கப்பட்டது சச்சினா - கோலியா யாரை அணியில் சேர்ப்பீர்கள் என்று ? இதில் பெரும்பாலானோர் கோலி என வாக்களித்தனர். 20's கிட்ஸ்தான் கோலிக்கு வாக்களித்து இருப்பார்கள் என்று பெரும்பாலானோர்களின் குற்றச்சாட்டு. 

சமூகவலைத்தளங்களிலும் அவர்களே நிரம்பி இருப்பதால் கோலி அந்த வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றார். இப்போதும் சொல்கிறேன் சச்சினோ, கோலியோ அவரவர் காலத்தின் சிறந்த வீரர்கள். ரெக்கார்டுகளை பார்த்தால் சச்சின்தான் இப்போதும் டாப், சச்சினின் அத்தனை ரெக்கார்டுகளையும் கோலி முறியடிக்கலாம், முடியாமல் போகலாம் அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதுவரை சமூக வலைத்தளங்களில் இந்தச் சண்டைகள் தொடரும். கோலியின் ஆட்ட நுணக்கங்கள் அனைத்தும் சச்சினை நினைவுப்படுத்துபவரை. ஏன், அவரே பல முறை இதனை சொல்லி இருக்கிறார். "சச்சின் போல விளையாட வேண்டும் என்றுதான் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தேன், ஆனால் அவர் கூடவே விளையாடுவேன் என கனவிலும் நினைக்கவில்லை" என கோலி ஒரு முறை கூறியிருந்தார்.

சச்சினின் காலக்கட்டம்

சச்சின் 1989 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கினார். அதிலிருந்து 1992, 1996, 1999, 2003, 2007, 2011 என ஆறு உலகக் கோப்பையை விளையாடியவர். இதில் 1996, 1999, 2003, 2011 உலகக் கோப்பைகளில் சச்சின் டெண்டுல்கர் மட்டும் டாப் ஸ்கோரர். அப்போதிருந்த ஒருநாள் போட்டிகள் விதிமுறைகள் எல்லாம் வேறு. ஏன் முதல் முதலில் மூன்றாவது அம்பையர் நடைமுறைப்படுத்தி அதில் முதலில் அவுட் கொடுக்கப்பட்டவர் சச்சின்தான். சச்சின் பேட்டிங்கின்போது சந்தித்த உலக்தரம் வாய்ந்த பவுலர்கள் பலர் இருந்தார்கள்.

பிட்சில் பேட்டுடன் வந்து நின்றால் மரண பயமே வந்துவிடும். ஆனால், கோலியின் காலக்கட்டமான இப்போது எண்ணிப் பார்த்தால் கூட ஒரு பயமுறுத்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை. ஆனால், சச்சினின் காலக் கட்டத்தில் ஆம்புரோஸ், பிஷப், வால்ஷ், டெர்மோட், ஆலன் முலாலி, வக்கார் யூனஸ், வாசிம் அக்ரம், முகமது ஜாவத், மெக்ராத், கில்லஸ்பி, வார்னே, பிரட் லீ, சமிந்தா வாஸ், புஷ்பகுமாரா, முரளிதரன், தர்மசேனா, முஷ்டக் அகமது, சக்லைன் முஷ்டாக், ஹீத் ஸ்டிரீ்க், டியான் நாஷ், கிறிஸ் கெய்ன்ஸ் என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் கோலியின் இப்போது காலக்கட்டத்தில் அதிபயங்கரமான பவுலர் என்று யாருமே இல்லை. இதுதான் கசப்பான உண்மை. வேகப்பந்து வீச்சுக்கு புகழப்பட்ட வெஸ்ட் இண்டீஸிலும், பாகிஸ்தானும் சிறந்த பவுலர்களை உருவாக்க முடியாமல் திணறுகிறது. ஆஸ்திரேலியாவின் இப்போதைய நிலமை ஐயோ பாவமாக இருக்கிறது. எனவே அப்போதைய பவுலர்களை சமாளித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த கனவையும் சுமந்தவர் சச்சின் என்பதை 20's கிட்ஸ்களுக்கு தெரியாது. கிட்டத்தட்ட 1994 முதல் 1999 ஆண்டு வரை. அதாவது சவுரவ் கங்குலி இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்கும் வரை தனது பேட்டிங்கால் ஒட்டுமொத்த இந்திய அணியை சும்ந்தார். பின்பு, திராவிட், தோனி ஆகியோர் கேப்டனாகி ஒரு அணியை உருவாக்கிய பின்பே சச்சின் நிம்மதியாக தனது ஆட்டத்தை முழுமையாக விளையாடினார்.

ஆனால் கோலிக்கோ அப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. தோனி ஏற்கெனவே தயார் செய்து கொடுத்த அணியை வைத்து, பல புதிய வீரர்களையும் தேர்வு செய்து மிகப் பிரமாதமான ஒரு அணியை உருவாக்கியுள்ளார். இந்த அணியை வைத்து வெற்றிப் பெறுவதும் மட்டுமல்லாமல், தனது ஆட்டத்தையும் அசாதாரணமாக விளையாடி பல சாதனைகளை செய்துக் கொண்டு இருக்கிறார். அதனால்தான் 20's கிட்ஸ்க்கு கோலி இப்போதே ஒரு மிகப் பெரிய ஜாம்பவானாக காட்சியளிக்கிறார். ஆனால், அப்போது சச்சின் ஒரு சொதப்பலான அணியிலேயே விளையாடினார். இதனால் சச்சினுக்கு கடுமையான பிரஷர். ஒவ்வொரு ஆட்டத்திலும் சச்சின் சதம் அடிப்பார் என எதிர்பார்த்தார்கள். நிறைய தவறான நடுவர் முடிவுகளால் சச்சின் அவுட்டாகி இந்தியாவும் அவுட்டாகி இருக்கிறது. அதெல்லாம் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட பக்கங்கள்.

இப்போது தோனிக்கும், கோலிக்கும் இருக்கும் ரிவ்யூ வசதியெல்லாம் அப்போது சச்சினுக்கு கிடைக்கவே இல்லை. டி20 உலக் கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்தபோது பிசிசிஐ சச்சினை கேப்டனாக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டது. அப்போது "டி20 போட்டிகள் இளைஞருக்கானது, தோனியை கேப்டனாக்குங்கள்" என தேர்வுக் குழுவிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஏனென்றால் ஏற்கெனவே இந்தியாவுக்கு கேப்டனாக இருந்து அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஆனால் இதையெல்லாம் மீறி சச்சின்தான் இப்போது அனைத்துவிதமான சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.

விராட் கோலி இப்போது சச்சினை பின்தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்கிறார். பாவம் 20's கிட்ஸ்களுக்கு முழுமையான சச்சினை தெரியாது, அதனால் அவர்களை விட்டுவிடுவோம். சச்சின் எப்படிப்பட்டவர் என்று 2013 ஆம் ஆண்டு சச்சின் ஓய்வுப் பெற்றபோது கோலி இவ்வாறு தெரிவித்தார் "சச்சின் ஓய்வுப் பெறுகிறார் என்ற செய்தியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரின் லட்சக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். தயவு செய்து என்னை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம், ஏன் சச்சினை யாருடனும் ஒப்பிட வேண்டாம் ஒப்பிடவும் முடியாது. இவ்வாறு ஒப்பிடுவுது எனக்கு மிகவும் மன வேதனையை தருகிறது. சச்சின் ஒரு பிறவி திறமையாளர், நான் என் திறமையை வளர்த்துக்கொள்ள உழைத்துக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவுதான்" என்றார் கோலி.

சச்சின் டெண்டுல்கரை பார்த்து வளர்ந்தவர்தான் விராட் கோலி, அது அவருக்கே தெரியும். இதில் யார் பெஸ்ட் என்றும் அவருக்கு தெரியும். கிரிக்கெட்டை தீவிரமாக பின்பற்றும் அனைவருக்கும் தெரியும் சச்சினும் பெஸ்ட், கோலியும் பெஸ்ட் என்று. ஆனால், இப்போதுள்ள காலக்கட்டத்தை பார்த்தால் சச்சின் பெற்ற சிரமங்களை வைத்து பார்த்தால், கோலியை விட சச்சினின் சாதனை சற்றே கூடுதலான ஒன்றுதான். இதில், யார் பெஸ்ட் என்று விவாதம் நடத்தினால் நாட்டுக்காக விளையாடிய, விளையாடுகிற இருவரை குறைத்து மதிப்பிடுவதே ஆகும். இதனை 20's கிட்ஸ் தவிர்த்தால், நாம் கிரிக்கெட்டை மேலும் ரசிக்கலாம்.