விளையாட்டு

தோனியுடன் சர்பராஸ் கேட்ச்சை ஒப்பிடுவதா? - ஐசிசியின் கேள்விக்கு ரசிகர்கள் கலக்கல் பதில்

தோனியுடன் சர்பராஸ் கேட்ச்சை ஒப்பிடுவதா? - ஐசிசியின் கேள்விக்கு ரசிகர்கள் கலக்கல் பதில்

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது கான் பிடித்த கேட்ச் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி பிடித்த கேட்ச் இரண்டினையும் ஒன்றாக பதிவிட்டு யாருடைய கேட்ச் சிறந்தது என ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தது. ஐசிசி எழுப்பிய அந்த கேள்விக்கு ரசிகர்கள் பலர் ஸ்வாரஸ்யமாக பதில் அளித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அஃப்ரிதி வீசிய பந்து, ராஸ் டெய்லரின் பேட்டில் உரசி பின்னால் செல்ல, அதனை தாவி பிடித்தார் சர்பராஸ். அதேபோல், நேற்று ஜஸ்பிரிட் பும்ரா வீசிய பந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வெயிட் பேட்டில் பட்டு ஸ்சிலிப் திசையில் பின்னால் செல்லும். அதனை தோனி அழகாக டைவ் அடித்து பிடித்தார்.

ட்விட்டரில் பெரும்பாலும் இரண்டு வீரர்களின் கேட்சுகளையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால், தோனியின் கேட்ச் எப்படி சர்பராஸ் கானை விட சிறந்தது என தெளிவாக ஐசிசிக்கு பதிலடி கொடுத்தனர். தோனி காற்றில் பறந்து அந்த கேட்ச் பிடித்திருப்பார். ஆனால், சர்பராஸ் ஒரு கால் மூட்டை தரையில் வைத்தபடி தாவி பிடித்திருப்பார்.

ஷா அஃரிதி பந்துவீசும் போது சர்பராஸ் ஸ்டம்பிற்கு வலது புறமாக நின்றிருப்பார். பந்து பேட்டில் பட்டு அவருக்கு சற்று அருகே வரும். அதனை கணிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், பும்ரா ஆஃப் ஸ்விங் வீசுவார் என்பதால் தோனி ஸ்டம்பிற்கு பின்னால் நேராகவே நின்றிருந்தார். பும்ரா வீசிய பந்து தரையில் பட்டு உள்ளேதான் சென்றது. ஆனால், பிராத்வெயிட் அதனை தடுக்க முற்பட அது பின்னால் சற்றுவிலகியபடி சென்றது. அதனால், தோனி டைவ் அடித்து பிடித்தார்.

கேட்ச் பிடித்த உடன் சர்பராஸ் கான் கீழே விழுந்துவிடுவார். ஆனால், தோனி கேட்ச் பிடித்த வேகத்தில் எழுந்து நின்று உற்சாகமடைந்துவிடுவார். உடற்தகுதிதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். பாகிஸ்தான் ரசிகர்களே தோனியின் கேட்சை பாராட்டியுள்ளனர்.

ஒரு ரசிகர் கிண்டலாக, சர்பராஸ் டைவ் அடித்து கேட்ச் பிடித்ததே ஆச்சர்யம். ஆனால், தோனி கேட்ச் பிடித்து கீழே விழுந்ததுதான் ஆச்சர்யம் என கூறியுள்ளார்.

ஒருசிலர் இந்தியா பாகிஸ்தான் வீரர்களை ஒப்பிட்டு ஐசிசி வேண்டுமென்ற இப்படியொரு பதிவினை போட்டுள்ளது என்று கூறியிருந்தார்.