விளையாட்டு

நல்ல 'பிட்ச்' எப்படி இருக்க வேண்டும்? கொஞ்சம் சொல்லுங்களேன்! - வெளுத்து வாங்கிய அஸ்வின்

நல்ல 'பிட்ச்' எப்படி இருக்க வேண்டும்? கொஞ்சம் சொல்லுங்களேன்! - வெளுத்து வாங்கிய அஸ்வின்

jagadeesh

ஒரு நல்ல பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என எதாவது விதிமுறைகள் இருக்கிறதா அப்படி இருந்தால் கொஞ்சம் விளக்குங்களேன் என இந்திய கிரிக்கெட் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சரமாரியாக பேசியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே அகமதாபாதில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டி இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது. ஆனால் அகமதாபாத் பிட்ச் மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இதே அகமதாபாத் மைதானத்தில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் செய்தியாளர்களுடன் ஆன் லைனில் கலந்துரையாடினார் அப்போது செய்தியாளர் ஒருவர் அகமதாபாத் பிட்ச் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் "நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், நல்ல பிட்ச் என்றால் என்ன? அதற்கு ஏதேனும் விதிமுறைகள் இருக்கிறதா? கிரிக்கெட் என்றாலே பாலுக்கும் பேட்டுக்கும் நடக்கும் போட்டிதான். பவுலர்களுக்கும் போட்டியை வென்றாக வேண்டும், பேட்ஸ்மேன்களுக்கு திறமையாக வென்று ரன்களை சேர்க்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஆனால் நல்ல பிட்ச் என்றால் என்ன? யார் இதனை தீர்மானிக்கிறார்கள்? டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாள்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் அடுத்த மூன்று நாள்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டுமா? அட என்ன இது? இந்த விதிமுறைகள் எல்லாம் யார் கொண்டு வந்தார்கள், இப்போது அதையெல்லாம் தாண்டி நாம் செல்ல வேண்டும். இருக்கின்ற ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்துதான் யோசிக்க வேண்டும். எனக்கு தெரிந்து இதில் இங்கிலாந்து வீரர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றே தோன்றுகிறது " என்றார் அஸ்வின்.