அனைவரும் தீவிரமாக எதிர்பார்த்துவரும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நாளை மெக்ஸிகோவில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவும் தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. மெக்சிகோவுடன் இந்த தொடரை கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் சேர்த்து நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் ஆகியோருக்கு இறுதி கால்பந்து உலககோப்பையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கால்பந்தை ஆளப்போகும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதைத் தீர்மானிக்கும் தொடராகவும் இந்த உலகக்கோப்பை திகழவுள்ளது.
கடந்த இரு கால்பந்து தொடர்களிலும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபித்துள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக பலரும் இந்த தொடரில் உருவெடுத்துள்ளனர். மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ஆடி கிளப் போட்டிகள் மட்டத்தில் ஏற்கெனவே எம்பாப்பேக்கு இணையானவராக உருவெடுத்துள்ளார் நார்வே அணியின் நட்சத்திர எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland).
ஐரோப்பிய தகுதிச் சுற்று தொடரில் எம்பாப்பே வெறும் 5 கோல்களை மட்டுமே அடித்த நிலையில், 16 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்து, தனது நாட்டை தனி ஒரு ஆளாக உலகக்கோப்பைக்கு தகுதிபெற வைத்துள்ளார் ஹாலண்ட். இந்த தகுதிச்சுற்று தொடரில் இரண்டாம் இடம்பிடித்த வீரர்கள் அடித்த கோல் எண்ணிக்கையே எட்டுதான் என்பதில் இருந்தே இவரின் அசாத்தியமான சாதனையை தெரிந்துகொள்ளலாம். இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த ஹாலண்ட், இந்த உலகக்கோப்பை தொடரிலும் முத்திரை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கால்பந்து உலகில் மெஸ்ஸியின் அடுத்த வாரிசு என கருதப்படும் வீரராக உருவெடுத்துள்ளார் ஸ்பெயின் அணியின் 18 வயதேயான லாமின் யமால். தனது அபார திறமை காரணமாக மெஸ்ஸி ஆடிய பார்சிலோனா கிளப்பில் மெஸ்ஸியின் 10-ஆம் எண் ஜெர்ஸியை அணிந்து விளையாடும் தகுதி இவருக்குக் கிடைத்தது. ஏற்கெனவே கிளப் லெவலைத் தாண்டி சர்வதேச அளவிலும் தனது முத்திரையைப் படைத்துள்ள யமால், ஸ்பெயின் அணி ஐரோப்பிய சாம்பியன் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக திகழ்ந்தார். தற்போது அபாரமாக ஃபார்மில் இருக்கும் யமால், அதனை இந்த உலகக்கோப்பையிலும் தொடர்ந்தால் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.
இந்த மூன்று பேரைத் தாண்டி அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பெல்லிங்காம் கால்பந்தின் அடுத்த சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் தூண்களில் ஒருவரான இவர் சர்வதேச அளவிலும் முத்திரை படைத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் மற்றொரு நட்சத்திரமான வினிசியஸ் ஜூனியர் தற்போதே பிரேசில் அணியின் முதன்மை ஸ்ட்ரைக்கராக உருவெடுத்துள்ளார். தற்போதைய உலகின் மிகச் சிறந்த வலதுபக்க தாக்குதல் (Right Winger) வீரராக கருதப்படும் இவர், பிரேசில் அணிக்கு மற்றொரு உலகக்கோப்பையை பெற்றுத் தருவார் என அந்நாட்டு ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
இவர்களை தவிர, ஜெர்மனி வீரர் ஜமால் முசியாலா, இங்கிலாந்து வீரர் சாகா, ஜெர்மனியின் பிளே மேக்கர் புளோரியன் விர்ட்ஸ், அர்ஜென்டினா அணியின் ஜூலியன் ஆல்வரேஸ் ஆகியோரும் இந்த கால்பந்து தொடரில் பங்கேற்கும் எதிர்கால நட்சத்திரங்களாக கருதப்படுகிறார்கள்.