நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் இடது கை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியுள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர் கடந்த ஞாயிற்றுகிழமை முடிவடைந்தது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் முதலிடம் பிடித்தார். இவர் இந்தத் தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் ஒரு இடது கை பந்துவீச்சாளர். அதேபோல இந்தத் தொடரில் இடது கை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானின் ஷாஹின் அஃப்ரிதி(16), முகமது அமீர்(17) ஆகியோர் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். பங்களாதேஷ் அணியின் இடது கை பந்துவீச்சாளர் முஸ்தாஃபீசூர் ரகுமான் 20 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவர்கள் தவிர இறுதி போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் இடது கை பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் 17 விக்கெட்டுகள் சாய்த்து அந்த அணி இறுதி போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ஆகவே மொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இடது கை பந்துவீச்சாளர்கள் 129 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இது கடந்த உலகக் கோப்பையில் இடது கை பந்துவீச்சாளர்கள் எடுத்த 102 விக்கெட்டுகளை விட மிகவும் அதிகமாகும்.
| உலகக் கோப்பை | இடது கை பந்துவீச்சாளர்கள் எடுத்த மொத்த விக்கெட்டுகள் |
| 1999 | 59 |
| 2003 | 77 |
| 2007 | 57 |
| 2011 | 46 |
| 2015 | 102 |
| 2019 | 129 |
அத்துடன் இதுவரை நடைபெற்றுள்ள 12 உலகக் கோப்பை தொடர்களில் 6 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இடது கை பந்துவீச்சாளர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அதன் விவரம்:
| ஆண்டு | அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் |
| 1992 | வாசிம் அக்ரம் (18 விக்கெட்) |
| 1999 | ஜியாஃப் அல்லாட்(20 விக்கெட்) |
| 2003 | சமிந்த வாஸ்(23 விக்கெட்) |
| 2011 | ஜாகிர் கான்(21 விக்கெட்) |
| 2015 | மிட்சல் ஸ்டார்க்(22 விக்கெட்) மற்றும் ட்ரென்ட் பவுல்ட்(22 விக்கெட்) |
| 2019 | மிட்சல் ஸ்டார்க்(27 விக்கெட்) |
இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் இடது கை பந்துவீச்சாளர்கள் மிகவும் தவிர்க்க முடியாத சொத்தாக விளங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களிலும் இடது கை பந்துவீச்சாளர்களின் விக்கெட்டுகள் பெரியளவில் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் பேட்ஸ்மேன்கள் அதிகமாக வலது கை ஆட்டக்காரர்களை சந்திப்பதால் அவர்களை எளிதில் சமாளிக்கின்றனர். ஆனால் இடது கை பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் தற்போது மிகவும் குறைந்த அளவில் உள்ளதால் அவர்களை சமாளிப்பதில் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். எனினும் நடப்பு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் ஒரு இடது கை பந்துவீச்சாளரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.