விளையாட்டு

'அணியில் இருந்து நீக்கப்பட்டால் கவலை வேண்டாம்' - இளம் வீரர்களுக்கு கவாஸ்கர் நம்பிக்கை

JustinDurai

இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த வீரர்களின் பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர்கள் ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான். கடந்த  டிசம்பரில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அதிவேக இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷுப்மான் கில்.

இரட்டை சதமடித்தும் அதன்பின்னர் இந்திய அணியில் அடுத்த 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத நிலைக்கு இஷான் கிஷன் தள்ளப்பட்டார். இந்த நிலையில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் இரட்டைச் சதத்தால் மனநிறைவு  அடைய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி பிரபல இணையத்தில் கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- "கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்களால் இரண்டு இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இரண்டுமே இளம் வீரர்களின் அற்புதமான இன்னிங்ஸாக இருந்தன. அவர்களுக்கு முன்னால் ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது. அவர்கள் (ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான்) 20களின் தொடக்கத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முழுக்க முழுக்க அவர்களின் திறனைப் பொறுத்தது. ஆனால் நான் சொல்வதெல்லாம், இரட்டை சதம் அடித்ததற்கு பிறகு நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மிதப்பில் நீங்கள் இருக்க வேண்டாம்.

இன்றைய இளைஞர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், அது ஒரு அற்புதமான விஷயம். அணியில் இடம் கிடைக்காதது குறித்து வீரர்கள் கவலை கொள்ள வேண்டாம். தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களுக்கு ஐபிஎல் களம் அமைத்துக் கொடுக்கிறது. கடந்த காலங்களில் அணியில் ஓரங்கட்டப்பட்ட ராஜேஷ் சவுகான், கருண் நாயர், லக்ஷ்மிபதி பாலாஜி, எஸ்.எஸ்.தாஸ் ஆகியோரின் வரிசையில் ஷுப்மான் கில் மற்றும் இஷானின் பெயர்கள் சேர்க்கப்படாது என நம்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்.