நடப்பு ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியும், பெங்களூரு அணியும் விளையாடின.
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் இதில் வெற்றி பெற்ற நிலையில் போட்டி முடிந்த பிறகு டிரஸ்ஸிங் ரூமில் தனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினருடன் மனம் உருகி பேசியுள்ளார் கேப்டன் விராட் கோலி.
அந்த வீடியோவை ஆர்.சி.பி அணியின் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
“இந்த சீசனில் நாம் சரியான வகையில் செயல்பட்டோம். ஒரு அணியாக இணைந்து விளையாடினோம். இதற்கு முந்தைய இரண்டு அல்லது மூன்று சீசன்களில் நாம் தவற விட்டதை இந்த முறை சரி செய்துள்ளோம்.
அணியின் அணுகுமுறை முற்றிலும் பாசிட்டிவாக இருந்தது. நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம் என்பதை மனதில் இருந்து நீக்க முடியாத நினைவுகளாக எடுத்து செல்லலாம்.
எட்டு வார காலம் குடும்பத்தை துறந்து ஒரு அணியாக பயோ பபுளில் இணைந்து பயணித்துள்ளோம். படிக்கல், சிராஜ் மாதிரியான வீரர்கள் அற்புதமாக விளையாடினோம்.
பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் நிர்வாக ஊழியர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
ரசிகர்கள் அனைவரும் நாம் எலிமினேட்டரை கடந்து செல்ல வேண்டுமென விரும்பினார்கள். இருப்பினும் அதை பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
இதில் கிடைத்த நேர்மறை அனுபவங்களை அடுத்த சீசனிலும் கேரி செய்வோம்” என அதில் தெரிவித்துள்ளார்.