விளையாட்டு

இரு அணிகளுக்குமே வெற்றி கட்டாயம்... CSK Vs RR - பலம், பலவீனம் என்ன?

webteam

நடப்பு சீசனில் கவலையளிக்கும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

பிளே ஆஃப்-க்குச் செல்ல வேண்டுமெனில் களமிறங்கும் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பெரும்பாலான போட்டிகளை கடைசி கட்டத்தில் இழந்து பரிதாப நிலையில் உள்ளது சென்னை. பேட்டிங்கில் வாட்சன், ராயுடு, டூபிளசி ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். கேப்டன் தோனி, ஆல்ரவுண்டர் சாம் கரண் ஆகியோர் போதுமான பங்களிப்பை அளிக்க தவறி வருவது அணிக்கு பின்னடைவு. காயத்தால் அவதிப்பட்டு வரும் பிராவோ, அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது அணிக்கு புதிய சிக்கல். பேட்டிங்கில் அசத்தினாலும் பந்து வீச்சில் சோபிக்க தவறி வருகிறார் ஜடேஜா. சுழற்பந்து வீச்சில் கரண் சர்மா ஆறுதல் அளித்து வருகிறார். சர்தூல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோரும் சுமாரான ஃபார்மில் உள்ளனர்.

சென்னை அணியைப் போலவே அதிக தோல்விகளால் துவண்டுள்ளது ராஜஸ்தான் அணி. பேட்டிங்கில் கேப்டன் ஸ்மித், உத்தப்பா ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு நல்ல செய்தி. இருப்பினும் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் ரன்களைச் சேர்க்க மிகவும் திணறி வருகின்றனர். பட்லர் ஆறுதலான ஃபார்மிலேயே உள்ளார். ஆல்ரவுண்டர் திவேதியா மத்திய வரிசைக்கு வலுசேர்த்து வருகிறார். வேகப்பந்து வீச்சில் ஆர்ச்சரும், இளம் வீரர் கார்த்திக் தியாகியும் ஆறுதலாக உள்ளார். உனத்கட் ரன்களை அள்ளி கொடுப்பது அணிக்கு பெரும் பின்னடைவு.

இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி பிளே ஆஃப்க்கான வாய்ப்பை இழந்து விடும் என்பதால் அனல் பறக்கும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.