விளையாட்டு

ஓய்வுப் பெற்றார் 'சிஎஸ்கே' சிங்கம் ப்ராவோ !

ஓய்வுப் பெற்றார் 'சிஎஸ்கே' சிங்கம் ப்ராவோ !

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான ட்வைன் ப்ராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற போவதாக அறிவித்துள்ளார். 

கிரிக்கெட் உலகின் ஆல்ரவுண்டர்களில் தவிர்க்க முடியாத நபர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ப்ராவோ. சரியான நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் கைகொடுத்து அணியின் வெற்றிக்கு உதவுபவர். சர்வதேச போட்டிகளை அல்லாமல் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் ப்ராவோ.

35 வயதான ப்ராவோ தனது முதல் போட்டியை 2004ம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாடினார். 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தனது முழுப்பங்களிப்பையும் ப்ரோவா வழங்கினார். இதுவரை 18 ஆண்டுகளில் 270 கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகள்,164 ஒருநாள் போட்டிகள், 66 டி20 போட்டிகள் இதில் அடங்கும்.

சிறந்த ஆல்ரவுண்டரான ப்ராவோ ஒருநாள் போட்டிகளில் 2968 ரன்கள் எடுத்துள்ளார். 25.36 அவரது சராசரியாக உள்ளது. அதேவேளையில் பந்துவீச்சிலும் ஜொலித்த ப்ராவோ, 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 43 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்ததே அவரது பந்துவீச்சின் பெஸ்ட்டாக உள்ளது. டி20ஐ பொறுத்தவரை 1142 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

தனது ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய ப்ராவோ, '' நான் இந்த கிரிக்கெட் உலகிற்கு முக்கியமான தகவலை தெரிவிக்க வேண்டும். அது என் ஓய்வு அறிவிப்பு. நான் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கிறேன். நான் என்னுடைய முதல் போட்டியை நினைவு கூறுகிறேன். பழுப்பு நிற தொப்பியை மாட்டிக்கொண்டு இங்கிலாந்தில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து சென்றது இன்னமும் என் நினைவில் உள்ளது. நான் உணர்ந்த உற்சாக உணர்வு என் வாழ்நாள் முழுவதும் என்னுடனே பயணிக்கும்.

இந்த ஓய்வை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும், கிரிக்கெட் அரங்கில் இளைய வீரர்களுக்கு வழிவிடும் விதமாக இதை நான் செய்யவே விரும்புகிறேன். ஐபிஎல் போட்டிகள் மாதிரியான கிளப் போட்டிகளில் நான் தொடர்ந்து விளையாட முடியும் என்று நம்புகிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியை தரும். சரியான உடல்தகுதியில் இருக்கும் போதே நான் நிராகரிக்கப்பட்டேன். எனது ரசிகர்களுக்காக நான் விளையாட வேண்டும் என்பதே என் முழு எண்ணமாக இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.